Latestமலேசியா

பிரிக்ஃபீல்ட்ஸ் நகைக் கடையில் துப்பாக்கியுடன் கொள்ளை; வைரலான CCTV காட்சிகள்

கோலாலாம்பூர், ஏப்ரல்-16-கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தன் சாலையில் உள்ள ஒரு தங்க நகைக் கடையில், துப்பாக்கி ஏந்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் ஹெல்மட் அணிந்த அடையாளம் தெரியாத 4 ஆடவர்கள் ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்து, தங்க நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

மொத்தமாக 15 கிலோ கிராம் எடையிலான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த 21 தட்டுகள் கொள்ளையிடப்பட்டன; அவற்றின் மதிப்பு 9.7 மில்லியன் ரிங்கிட் எனக் கணக்கிடப்படுகிறது.

சம்பவம் மிக வேகமாக நடைபெற்றதாகவும், சந்தேகநபர்கள் முன்கூட்டியே திட்டமிட்டே இந்த கொள்ளையை மேற்கொண்டதாகவும் போலீஸ் சந்தேகிக்கிறது.

வைரலான CCTV காட்சியில், நகைக் கடைக்குள் நுழைந்த அக்கும்பல் நகைகளை அள்ளிய வேளை, பணியாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உள்ளே ஓடினர்.

வெளியிலிருந்த பாதுகாவலரை, கொள்ளையர்களில் ஒருவன் பிடித்து இழுத்து வந்து உள்ளே உட்காரச் சொல்வதும் வீடியோவில் தெரிகிறது; அவரிடமிருந்து துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.

நல்ல வேளையாக சம்பவத்தின் போது யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை.

என்றாலும் பணியாளர்களும் உரிமையாளரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!