
போர்டிக்சன், ஜூலை-19-4 மாதங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak), நேற்று நெகிரி செம்பிலான், போர்டிக்சன் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார்.
தாய்லாந்தில் தங்கியிருந்த அவர், சட்டவிரோதமாக கிளந்தான் எல்லை வழியாக மலேசியாவுக்குள் நுழைந்து சரணடைந்தார்.
அதனை உறுதிப்படுத்திய நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Alzafny Ahmad, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட ஏதுவாக இன்று தமீம் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவார் என்றார்.
மார்ச் மாதம், இந்துக்களின் புனிதச் சின்னமான ‘திரிசூலத்தை’ அவமதித்ததாகக் கூறப்படும் வீடியோ தொடர்பாக அவர் மீது 192 போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதற்காக மார்ச் 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருந்த நிலையில், அவர் திடீரென தலைமறைவானார்.
வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டு, தாம் நாடு திரும்ப சில நிபந்தனைகளையும் அவர் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமீம் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ், வழிபாட்டுத் தலத்தையோ அல்லது புனிதப் பொருளையோ அவமதித்ததாக வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மிரட்டல் மற்றும் இணையத்தில் வெறுக்கத்தக்க கருத்துகளைப் பதிவிட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.



