
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு, இன மத பேதமின்றி பொது மக்கள் கைகொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெட்டாலிங் ஜெயா, Medan Selera 223 பகுதியில், வெள்ளத்தில் சிக்கிய தனது கணவரின் காரை மீட்க முற்பட்டபோது, அங்கு கூடியிருந்த மலாய், சீனர் மற்றும் இந்தியர்கள் என அனைத்து இனத்தைச் சேர்ந்த பொது மக்களும் ஒன்றிணைந்து உதவியதாக @naqilahzul எனும் பயனர் தனது Threads பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெள்ளநீர் உயர்ந்ததால் கார் அடித்துச் செல்லப்படக்கூடிய அபாயமான சூழலில், அந்நியர்கள் என பாராமல் முன்வந்து உதவிய அந்த மக்களின் செயலை அந்தப் பெண்மணி நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
_’மலாய், சீன, இந்தியர் எனப் பாராமல் அனைவரும் உதவிக்கரம் நீட்டினர்… நாம் அனைவரும் ஒரு மலேசியா’_ என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கனமழையால் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வாகனங்கள் சிக்கித் தவித்த நிலையில், இந்த ஒற்றுமை சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



