
கங்கார், ஜூலை-19-பெர்லிஸ் கங்காரில் உள்ள பள்ளி ஒன்றில், சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், முதலாம் படிவ மாணவர் ஒருவர் கணுக்கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பகடிவதைச் சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில், வகுப்பறைக்குள் நுழையும்போது அந்த மாணவர் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் பரிசோதித்தபோது, மாணவரின் இடது கணுக்காலில் முறிவு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவரின் தாயார் போலீஸில் புகார் செய்தார்.
விசாரணையில், கடந்த சில மாதங்களாக அந்த மாணவர் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தது தெரியவந்தது.
சக மாணவர்கள் தம்மைத் தாக்கியதுடன், குப்பைத் தொட்டிகளை தம் மீது வீசியதாகவும், எச்சில் துப்பியதாகவும், மேலும் தம்மிடமிருந்து பணம் பறித்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவுச் செய்துள்ள கங்கார் போலீஸார், பகடிவதையில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



