சுலாவேசி, மே-8 – எரிமலையின் அச்சுறுத்தல் தொடருவதால், வட சுலாவேசி மாகாணத்தில் உள்ள ருவாங் தீவில் வசிக்கும் அனைத்து மக்களையும் அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்ற இந்தோனேசிய அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
அவ்வகையில் ருவாங் தீவின் மொத்த மக்கள் தொகையான பத்தாயிரம் பேரும் 40 கிலோ மீட்டருக்குத் தொலைவில் உள்ள Bolaang Mongondow பகுதிக்கு மாற்றப்படுகின்றனர்.
அவர்களுக்கு அங்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என இந்தோனேசிய மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.
ருவாங் எரிமலை எப்போது வெடிக்கும் என்பது தெரியாது; இந்நிலையில் அடிக்கடி வெளியில் போவதும் வருவதுமாக இருந்தால் மக்களின் உயிருக்குத் தான் ஆபத்து என்றார் அவர்.
மக்களை வெளியேற்றியக் கையோடு, ருவாங் தீவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெடித்துச் சிதறியதில் இருந்து ருவாங் எரிமலையின் சீற்றம் தணிவதாகத் தெரியவில்லை.
அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டு வானில் கரும்புகையை அது கக்கி வருகிறது.
இதனால் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ருவாங் எரிமலையின் சீற்றம் தணியும் வரை மே 14 மட்டும் அப்பகுதியில் அவசர காலம் அமுலில் உள்ளது.
எரிமலை வெடிப்பின் ஒரு பகுதியாக சுனாமி ஆழிப்பேரலை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.