
இந்தோனேசியா, ஆகஸ்ட் 17 – இந்தோனேசியாவில் மூன்று விவசாயிகள், நீதிமன்றம் விதித்த 3 பில்லியன் ரூபாய் அபராதத்தை செலுத்த முடியாமல் வாழைப்பழம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிலத்தைப் பயன்படுத்தியதுடன், அங்கிருந்த பாம் எண்ணெய் பழங்களை எடுத்ததாக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சுமார் 50 விவசாயிகள் 2005ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்டதாகக் கருதிய அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நிலம் நிறுவனத்தின் உரிமைப் பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பில்லியன் கணக்கில் அபராதத்தை செலுத்த முடியாததால், தங்களால் இயன்ற விவசாயப் பொருட்களை நீதிமன்றத்திடம் வழங்கியதாக மூவரும் தெரிவித்தனர். நீதிமன்றம் அவற்றை ஏற்றுக்கொண்டு, அபராதத் தொகைக்கான பதிவை மேற்கொண்டது.



