லங்காவி, ஜூலை 11 – கோலா கெடாவிலிருந்து, 163 பயணிகளுடன் லங்காவி நோக்கி பயணமான பெரி பயணப் படகு ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென செயலிழந்ததால், அதிலிருந்தவர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் கூடுதலாக சிக்கிக் தவிக்க நேர்ந்தது.
அச்சம்பவம் நேற்று மாலை மணி 6.45 வாக்கில், கோலா கெடா படகு முனையத்திலிருந்து 7.5 கடல் மைல் தொலைவில் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட பெரியின் இரு இயந்திரங்களும் திடீரென செயலிழந்து நின்று போனதாக கூறப்படுகிறது.
எனினும், தொழில்நுட்ப பணியாளர்களின் உதவியுடன், இரு இயந்திரங்களில் ஒன்று பழுதுபார்க்கப்பட்டதை தொடர்ந்து, இரவு மணி 11.44 வாக்கில் அந்த பெரி பாதுகாப்பாக லங்காவியை சென்றடைந்தது.
முன்னதாக, கோலா கெடா படகு முனையத்தில், கடல் நீர் மட்டம் 1.2 மீட்டருக்கும் குறைவாக பதிவானதால், அந்த பெரி மீண்டும் கோலா கெடாவுக்கு திரும்புவது பாதுகாப்பான நடவடிக்கை இல்லை என தீர்மானிக்கப்பட்டது.
அதனால், ஒற்றை இயந்திரத்தோடு, கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில், அந்த பெரி லங்காவிக்கு பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டதாக, பெரி லைன் வென்ச்சர்ஸ் (Ferry Line Ventures) நிறுவனத்தின் மேலாளர் கேப்டன் பஹரின் பஹரோம் (Kapten Baharin Baharom) தெரிவித்தார்.