Latestமலேசியா

லெபோ அம்பாங்கில் விரிவான சமூக சேவை, மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுப்பு – லெபோ அம்பாங் வணிகர் சங்கம்

கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூர், லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் (Persatuan Peniaga-Peniaga Lebuh Ampang) 17-ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

லெபோ அம்பாங்கில் தலைமுறை தலைமுறையாக வர்த்தகம் செய்து வரும் பாரம்பரிய வணிகர்கள் இணைந்து நடத்தி வரும் மிக முக்கிய அரணாக இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இச்சங்கம், வணிகர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பொது மக்களுக்கும் பல்வேறு சமூக நல உதவிகளைத் தொய்வின்றி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவரான டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் பின் அப்துல் ரசாக் (Datuk Haji Abdul Rasull Bin Abdul Razak) உள்ளிட்ட முன்னாள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடப்புத் தலைவர் வேலாண்டி பழனி, செயலாளர் ராஜன் பின் அப்துல் மஜீத், பொருளாளர் லோகநாதன் கத்த ராயன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் பங்கேற்றனர்.

2025-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வருடாந்திர நிதி கணக்கு அறிக்கை ஆகியவை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், புதிய உத்தேசத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக உறுப்பினர்களிடையே ஆழமான கலந்துரையாடல் நடைபெற்றது.

மாறிவரும் நவீன வணிகச் சூழலில், லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் உறுதியாக வலியுறுத்தப்பட்டது.

பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய சங்கத் தலைவர் வேலாண்டி, கூட்டம் கட்டுக்கோப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்…

வர்த்தகர்களின் வாழ்வாதாரச் சவால்களின் போது துணையாக நின்றது மட்டுமன்றி, லெபோ அம்பாங் பகுதியின் மேம்பாட்டுக்கு, பொது மக்களின் அவசரத் தேவைகளுக்கும் இச்சங்கம் எப்போதும் முன்னின்று உழைத்துள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் வணிக மேம்பாடுகளைத் தாண்டி, இன்னும் பல விரிவான சமூகச் சேவை திட்டங்களையும், மக்கள் நல உதவிகளையும் லெபோ அம்பாங் பகுதியில் முன்னெடுக்க சங்கம் திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.

இவ்வேளையில், வரலாற்றுச் சிறப்புமிக்க லெபோ அம்பாங் பகுதியின் வணிகக் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாரம்பரிய வர்த்தகர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திடம் சில முக்கியக் கோரிக்கைகளைச் சங்கம் சார்பில் முன்வைத்துள்ளதாக, அதன் செயலாளர் ராஜன் பின் அப்துல் மஜித் கூறினார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் பாரம்பரிய வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் வணிகச் சவால்கள், வாடிக்கையாளர் வருகை மற்றும் மாநகர மன்றக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்களின் ஒற்றுமை, உரிமைகள் மற்றும் சமூகப் பொறுப்புகளை முன்னிறுத்தும் வகையில், இச்சங்கம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையுடன் கூட்டம் நிறைவுற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!