
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸை, போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், விசாரணை என்றப் பெயரில் போலீஸ் நிலையத்தில் அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, சில நாட்களில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, போலீஸாரின் வன்முறைக்கு எதிராக பெரிய எதிர்ப்புகளை கிளப்பியது.
இந்நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தந்தை-மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
ஒருவேளை நீதிமன்றம் தலையிடாவிட்டால், தந்தை-மகனுடன் உண்மையும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.
“இச்சம்பவத்தில் வேலியாக இருந்து பாதுகாக்க வேண்டிய போலீஸே பயிரை மேய்ந்துள்ளது.இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆயுள் தண்டனை போலீஸுக்கு அச்சுறுத்தலாக இருக்காது”
எனவே இந்த வழக்கை ‘அரிதிலும் அரிதான’ வகை’ (rarest of rare) எனக் கருதி, அதிகபட்ச தண்டனை வழங்குவதாக நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
அதோடு போலீசாருக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை 1.04 கோடி ரூபாயாகும்.
இந்தத் தொகையை பென்னிக்ஸ் தாயாரிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனையை அறிவித்த கையோடு, நீதிபதி தனது பேனா நுனியை முறித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்பாவி தந்தை-மகனின் உயிர் பறிபோனதற்கு ஒருவழியாக நீதி கிடைத்துள்ளது குடும்பத்தாரையும் மக்களையும் நிம்மதியடைச் செய்துள்ளது.



