
கோலாலம்பூர், அக்டோபர்-25, வீட்டுக் காவல் தொடர்பில் புதியச் சட்டத்தை இயற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கும், தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் உட்பட எந்தவொரு தனிமனிதருக்கும் தொடர்பில்லை.
ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உண்மையில், தண்டனை முறையிலிருந்து மறுவாழ்வு முறையிலான நீதிக்கு மாறும் முயற்சியாகவே அப்புதியச் சட்டத்தை இயற்ற முடிவெடுக்கப்பட்டது.
அதாவது, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவரை சமூகத்தின் பக்கம் திரும்பக் கொண்டு வருவதே அதன் நோக்கமென, தொடர்புத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
கடந்தாண்டு துணைப் பிரதமர் தலைமையிலான அமைச்சர் நிலையிலான கூட்டத்திலேயே அதற்கான முயற்சிகளும் கலந்தாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு விட்டன என்றார் அவர்.
குறிப்பிட்ட குற்றங்களுக்கு மாற்று தண்டனையாக வீட்டுக் காவலை அறிமுகப்படுத்தும் புதியச் சட்டம் இயற்றப்படவிருப்பதாக, 2025 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அவ்வகையில், முதல் தடவை குற்றமிழைத்த, அதுவும் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 20,000 சிறைக் கைதிகள் வீட்டுக் காவலுக்கு பரிசீலிக்கப்படுவர் என உள்துறை அமைச்சும் கூறியிருந்தது.