
கோலாலம்பூர், ஜூலை-6,
மலேசிய முதியவர்களை வெளிநாட்டு பெண்களுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி வந்த ஒரு கும்பல், குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் முறியடிக்கப்பட்டது.
வெளிநாட்டு வாழ்க்கைத் துணையை மணந்துகொள்ள விரும்பும் கிள்ளான் பள்ளத்தாக்கு வாசி முதிய மலேசியர்களை, இக்கும்பல் குறிவைத்து செயல்பட்டு வந்துள்ளதாக, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
திருமணங்களைப் பதிவுச் செய்வதற்கான ஒரு விண்ணப்பத்திற்கு 50 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரையிலான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே இக்கும்பல் இயங்கி வந்ததாக நம்பப்படுகிறது.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஜூலை 3-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 30 முதல் 66 வயதுக்கு இடையிலான 5 மலேசிய ஆண்கள் கைதாகினர்.
அவர்களில் 4 பேர் அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்டு வந்த வேளை, மற்றொருவர் இடைத்தரகராக இருந்து வந்துள்ளார்.
கைதான ஐவருமே, பிறரின் கடப்பிதழ்களைத் தவறான முறையில் வைத்திருந்ததற்காகவும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மொத்தம் 63 கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் 6 மலேசியக் கடப்பிதழ்கள் ஆகும்.
மற்றவை சீனா, வங்காளதேசம், இந்தோனேசியா, வியட்நாம், மியன்மார், மக்காவ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடையவை.
குடிநுழைவுத் துறை மற்றும் தேசிய பதிவிலாகாவின் ஆவணங்களை கொண்ட 26 கோப்புகள், 2 கார்கள், ஒரு பையில் இருந்த பொருட்கள் மற்றும் ஒரு மடிக்கணினியும் பறிமுதல் ஆகியுள்ளன.