கோலாலம்பூர், ஜூலை 2 – தலைநகர், கெப்போங், தாமான் தாசிக் மெட்ரோபோலிடன் ஏரியில், பொறுப்பற்ற தரப்பினரால் விடப்பட்ட “அலிகேட்டர் கர்” ரக மீன் இறந்து கிடக்க காணப்பட்டது.
1990-ஆம் ஆண்டு மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், அலிகேட்டர் கர் மீன் இனத்தை, நாட்டில் இறக்குமதி செய்யவோ, விற்கவோ, வளக்கவோ, வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக, புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் மீன்வளத்துறை இயக்குனர் சுஹானா காசிரோன் (Suhanah Kassiron) தெரிவித்துள்ளார்.
அவ்வகை மீன்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வரும் பொறுப்பற்ற சில தரப்பினர், பின்னர் அதனை நீர்நிலைகளில் விட்டுவிடுகின்றனர்.
முதலையை போல ஒத்த தலையை கொண்டிருந்தாலும், அலிகேட்டர் கர் மீனால், மனிதர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை. சிறு மீன்களை மட்டுமே அவை உணவாக உட்கொள்கின்றன.
எனினும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை, நாட்டின் நீர் நிலைகளில் விடுவது, சுற்றுசூழல் அமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உள்நாட்டு மீன்வளத்தை அது பாதிக்கக்கூடும்.
அதனால், அலிகேட்டர் கர் உட்பட வெளிநாட்டு மீன்களை பிடிக்கும் அல்லது கண்டெடுக்கும் தரப்பினர், அதனை வைத்திருக்கவோ, மீண்டும் பொது நீர் நிலைகளில் விடவோ வேண்டாம் என சுஹானா நினைவுறுத்தினார்.
முன்னதாக, கெப்போங், தாமான் தாசிக் மெட்ரோபோலிடனில், மொது நடையில் ஈடுபட்டிருந்த போது, இறந்து கிடந்த அலிகேட்டர் கர் மீனை கண்டதாக, X சமூக ஊடகத்தில் Rudy Hasnan என்பவர் வெளியிட்டுள்ள பதிவு நேற்று தொடங்கி வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.