ஷா ஆலாம், ஜூன்-25, சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் வரும் சனிக்கிழமை பாத்தாங் காலி, டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் Jobcare வேலை வாய்ப்புக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
எனவே வேலைத் தேடுவோர் இவ்வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.
வேலைத் தேடுவோருக்கு உதவும் வகையிலும், சமூகத்தில் வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தவும் ஏதுவாக மாநில அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சி அதுவென அவர் சொன்னார்.
இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் பல்வேறு தொழில்துறைகளைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்கள் சேவை முகப்புகளைத் திறக்கவிருக்கின்றன.
தத்தம் நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் அதன் போது அறிமுகப்படுத்தப்படும்.
வேலைத் தேடி வரும் சிலாங்கூர் மக்களுக்கு, வருங்கால முதலாளிகளுடன் நேரடியாகத் தொடர்புக் கொண்டு தகவல்களைக் கேட்டறிய இதுவோர் அரிய வாய்ப்பு என பாப்பாராயுடு கூறினார்.
அன்றைய நாள் முழுவதும் அங்கு வேலைக்கான நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.
எனவே, வருபவர்கள் கையோடு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்களையும், இன்னபிற சான்றிதழ்களையும் கொண்டு வருவது நல்லது என பாப்பாராயுடு கூறினார்.