
ஷா அலாம், அக்டோபர் -6,
ஷா அலாம் , செக்சன் 22 இல் , பெர்சியாரன் தெங்கு அம்புவானில் மின் கம்பத்தில் மோதுவதற்கு முன் புரோட்டோன் சாக FLX கார் ஒன்று கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் ஒருவர் இறந்ததோடு , பெண் குழந்தை உட்பட நால்வர் கடுமையாக காயம் அடைந்தனர். இருக்கையில் சிக்கிக்கொண்ட காரின் ஓட்டுனரான 39 வயதுடைய நபர் மதியம் மணி 1.45 அளவில் மீட்கப்பட்ட போதிலும் கடுமையான காயத்தினால் அவர் மரணம் அடைந்ததை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். 38 வயதுடைய பெண், நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் ஏழு மாத குழந்தையும் இந்த விபத்தில் காயம் அடைந்தனர் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் ( Ahmad Mukhlis Mukhtar ) தெரிவித்தார்.
கடுமையாக காயம் அடைந்த அனைவரையும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களது உறவுகள் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.