
தெஹ்ரான், ஜூலை-12 – ஈரான் திடீரென ஹோர்முஸ் நீரிணையை மூடியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கடற்படைப் பாதுகாப்பு அரண்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் என 140 இலக்குகளைக் குறி வைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனால், மத்தியக் கிழக்கில் இராணுவ மோதல் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
வியூக முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையை மூடுவதற்கு ஈரான் எடுத்த முடிவு ஒரு ‘மிக மோசமான தேர்வு’ என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அனைத்துலகக் கடல் போக்குவரத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க இராணுவம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விநியோகத் தடையால் உலகளாவிய எரிசக்தி சந்தை தத்தளித்து வரும் வேளையில், உலக வல்லரசு நாடுகள் உடனடியாகத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் இந்த மோதல் ஒரு முழுமையான போராக வெடிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.



