
ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தாம் கூறவில்லை என வீடமைப்பு மற்றும் ஊராட்சி மேம்பாட்டுத் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், SRC International வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவிக்காமல் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சரவைப் பதவியிலிருந்து விலகுவேன் எனத் தெரிவித்ததாக அவர் கூறினார்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை தண்டனை நிறைவடையும் முன் விடுவிப்பது, நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக் கொள்கையின் மீதான நம்பிக்கையை பாதிக்கும் என்றும், அது நடந்தால் கொள்கை அடிப்படையில் பதவி விலகத் தயார் என்றும் ங்கா தெரிவித்தார்.
அதேவேளை, ஜோகூரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், அந்த வெற்றி மிகப்பெரிய பொறுப்பையும் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே, தேர்தல் முடிவைத் தொடர்ந்து ங்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றி பதவி விலக வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மேலும், ங்காவின் பதவி விலகல் கடிதத்தைத் தயாரிக்க தாமே உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கிண்டலாகத் தெரிவித்திருந்தார்.



