புத்ராஜெயா, ஜூன்-18, நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி LPG சமையல் எரிவாயுவை விற்ற வியாபாரிக்கு, சிலாங்கூர் பூச்சோங்கில் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டார் பாரு பூச்சோங்கில் உள்ள அவரது கடையில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 14 கிலோ கிராம் LPG எரிவாயு தோம்பு அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையான 26 ரிங்கிட் 60 சென்னுக்கு பதிலாக 34 ரிங்கிட்டுக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
எரிவாயு விலையில் முறைகேடு நடப்பதாகக் கூறி வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அச்சோதனை நடத்தப்பட்டதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அமுலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் ( Datuk Azman Adam ) தெரிவித்தார்.
காரணம் கேட்டால், ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி அரசாங்கம் அமுல்படுத்திய இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானிய முறை மீது அவ்வியாபாரி பழிபோடுகிறார்.
இதையடுத்து, அதிக விலைக்கு விற்கப்பட்ட அனைத்து எரிவாயு தோம்புகளுக்கும் சீல் வைத்த அதிகாரிகள், 2011 விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக வர்த்தக ஆவணங்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றனர்.
அதிக விலைக்கு விற்றது குறித்து 5 வேலை நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரும் நோட்டீசும் அவருக்கு வழங்கப்பட்டதாக டத்தோ அஸ்மான் கூறினார்.