கோலாலம்பூர், ஜூலை 20 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தாம் செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் ரிங்கிட் வருமான வரிக் கடனை இன்னும் செலுத்தவில்லை.
அவர் சிறையில் இருந்தாலும் அவரது வழக்கு இன்னும் முடியவில்லை. அவருக்கு பெரிய கடன்கள் உள்ளன.
நஜீப் இன்னமும் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு 1.7 பில்லியன் ரிங்கிட் கடன் செலுத்த வேண்டியிருப்பதாக அண்மையில் நிதி அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தீர்க்கப்படவில்லை என்றும், உள்நாட்டு வருமான வாரியம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்திருந்தது.
நீதிமன்ற நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதோடு அடுத்த விசாரணை ஜூலை 29 ஆம்தேதி கோலாலம்பூரில் உள்ள திவால்நிலை உயர் நீதிமன்றத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் வருமான வரி பாக்கிகளை நஜிப் செலுத்திவிட்டாரா என்பதை தெரிவிக்குமாறு நிதியமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் வினவியிருந்தார்.
உயர்நீதிமன்றம் தனக்கு விதித்த முடிவுக்கு எதிராக நஜிப் செய்திருந்த மேல் முறையீட்டை கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம்தேதி நிராகரித்த கூட்டரசு நீதிமன்றம் , செலுத்தப்படாத வரிகளாக 1.69 பில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.