
கோலாலாம்பூர், ஜூலை-20-பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடப் பணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 12 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலவையில் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போது, கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், நிதி ஒதுக்கீட்டை வழங்கியப் பிரதமருக்கும் நன்றித் தெரிவித்த லிங்கேஷ்வரன், பத்தாண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் மடானி அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதாக வருணித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி மேலாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடு மற்றும் ஒப்பந்ததாரரின் நீதிமன்ற வழக்கு காரணமாக இத்திட்டம் நீண்டகாலம் முடங்கியது.
கடந்த மே மாதம் இவ்வழக்கில் கல்வி அமைச்சு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமைச்சரின் உத்தரவின் பேரில் புதிய டெண்டர் குத்தகை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இப்புதிய திட்டத்திற்கு 25 ஒப்பந்ததாரர்கள் நேரில் பார்வையிட்டு, 18 பேர் டெண்டர் ஆவணங்களை வாங்கியுள்ளனர்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ‘Yayasan Didik Negara’ மூலம் நிதி வழங்கப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ ஏற்புக் கடிதம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்.
இதையடுத்து அடுத்தாண்டின் நான்காம் காலாண்டில் கட்டடப் பணிகள் நிறைவுப் பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக ஃபாட்லீனா மேலும் சொன்னார்.



