
ஜோகூர் பாரு, ஜூலை-25-ஜோகூர் மாநிலத்தில் 10 துணை ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர்கள் எழுப்பிய அரசியல் விமர்சனங்களுக்கு மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மைய ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுப் பெற்று மீண்டும் ஆட்சியமைத்த பாரிசான் நேஷனல், மாநில வரலாற்றில் முதன் முறையாக துணை ஆட்சிக் குழு உறுப்பினர்களை நியமித்தது.
அவர்களில், கல்வி மற்றும் தகவல் துறைக்கு நியமிக்கப்பட்ட ம.இ.காவைச் சேர்ந்த கஹாங் சட்டமன்ற உறுப்பின V. ருகேந்திரனும் அடங்குவார்.
இந்நிலையில், மாநிலச் சட்ட ஆலோசகரின் ஆலோசனையின்படியே இந்த நியமனங்கள் மாநில அரசாங்கத்தின் நிர்வாக எல்லைக்குள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு மாநில ஆட்சிக்குழு கூட்டங்களில் பங்கேற்கும் உரிமையோ அல்லது கொள்கை, நிதி மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரமோ கிடையாது.
நிர்வாகத்தின் முழு அதிகாரமும் வழக்கம்போல ஆட்சிக்குழு உறுப்பினர்களிடமே இருக்கும் என ஓன் விளக்கினார்.
புதிய அரசியல் பதவிகளை உருவாக்குவதோ அல்லது அரசாங்கத்தின் சுமையை அதிகரிப்பதோ இதன் நோக்கமல்ல.
மாறாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ) மற்றும் RTS இணைப்பு போன்ற பெரும் திட்டங்களைச் செயல்படுத்தும் வேளையில், நிர்வாகத் திறனை அதிகரிக்கவும் பொது மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கவுமே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என மந்திரி பெசார் மேலு கூறினார்.
மாநிலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு, கூடுதல் இலாகாக்கள் எதுவும் உருவாக்கப்படாமல், ஏற்கனவே உள்ள அரசு சொத்துகள் மற்றும் வசதிகளைக்கொண்டே மிகக் குறைந்த செலவில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஓன் ஹஃபிஸ் தெளிவுபடுத்தினார்.



