கோலாலம்பூர், மே 13 – ஜோகூர் போலீஸ் படைத் தலைவரை போல ஆள்மாறாட்டம் செய்த கட்டட மேலாளர் ஒருவரின் செயல், அவருக்கே வினையாக முடிந்தது.
51 வயது எ. கணேசன் எனும் அந்நபர் தமக்கு எதிரான அந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவர் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இம்மாதம் ஆறாம் தேதி, இரவு மணி 8.35 வாக்கில், பண்டார் பாரு செந்தூலில், ஜோகூர் மாநில போலீஸ் தலைவரை போல ஆள்மாறட்டம் செய்து, நபர் ஒருவரை ஏமாற்றியதாக கணேசனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 பேரை விடுவிக்க வேண்டுமானால், தலா ஆயிரத்து 500 ரிங்கிட்டை அந்நபர் செலுத்த வேண்டுமென கணேசன் கூறியுள்ளார். எனினும், அந்நபர் பணம் எதையும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.