Latestமலேசியா

13-ஆவது மலேசியத் திட்டம்; இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மட்டும் போதாது; அமுலாக்கம் அவசியம் – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜூலை-7 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூக மேம்பாட்டுக்காக சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக, ம.இகா பரிந்துரை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

ம.இகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அதனை தெரிவித்தார்.

சமூகப் பொருளாதாரம், கல்வி, இளையோர், பெண்கள், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளை அப்பரிந்துரைகள் உள்ளக்கியுள்ளன.

அவ்வறிக்கையை நன்கு பரிசீலித்து, உரியவற்றை ஜூலை 31-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள 13-ஆவது மலேசியத் திட்டத்தில் அரசாங்கம் சேர்த்துக் கொள்வதோடு அதன் அமுலாக்கத்தை உறுதி செய்யும் என தாம் நம்புவதாக விக்கினேஸ்வரன் கூறினார்.

சமூகத்தைச் சேர்ந்த பிற தரப்பினரும் தங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளதைத் தாம் அறிவதாக கூறிய அவர், இருப்பினும் இறுதியில் ஓர் திடமான ஆக்ககரமான இந்தியர் நலன் தொடர்பான திட்டம் அமுலுக்கு வருகிறதா என்பதே முக்கியம் என்றார்.

கடந்த காலங்களில் ம.இகா முன்னெடுத்த Malaysian Indian Blueprint எனும் மலேசியர் இந்தியர் பெருந்திட்டம் அரசாங்கத்தால் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது என்றார் விக்னேஸ்வரன். அதன் அமுலாக்கத்தை உறுதிப்படுத்த அப்போதிருந்த செடிக் பிரதமர் துறையின் கீழ் வைக்கப்பட்டு அமைச்சரவையின் சிறப்பு செயற்குழுவும் அதனை கண்காணித்து வந்ததையும் அவர் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவை அனைத்தும் பின்னர் 2018 அரசியல் மாற்றத்தால் தடைபட்டன. அதனை மீண்டும் கொண்டு வர கடந்த 2022-ல் ம.இ.கா முன்னெடுப்புகளை செய்து வந்த நிலையில் மீண்டும் அரசியல் மாற்றத்தால் நின்று போனது.

அதனால் திட்டம் போடுவது ஒரு புறம் இருக்க அதன் தொடர்ச்சியான அமுலாக்கத்தை அரசாங்கம் உறுதி செய்வதுதான் மிக அவசியம் என வலியுறுத்தினார்.

ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ம.இ.கா மூத்த மகளிர் தலைவிகளின் முதலாவது ஒன்றுகூடல் (reunion) நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!