
கோலாலாம்பூர், ஜூலை-9 – இந்தியச் சமூகத்தின் நீண்டகால முன்னேற்றத்திற்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் மலேசிய இந்தியர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியை உடனடியாக நிறுவ வேண்டுமென, MIET எனப்படும் மலேசியப் பொருளாதார உருமாற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய கவனம் செலுத்தும் அம்சங்களுக்கு, நீண்டகால ஆதரவை கட்டமைப்பதை இந்நிதி நோக்கமாகக் கொண்டுள்ளதாக, MIET தலைவர் மனோகரன் மொட்டையன் தெரிவித்தார்.
இது இனத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக தேவையின் அடிப்படையில், சமூகப் பொருளாதார முன்னுரிமையின் மூலம் சமத்துவத்தை வலியுறுத்தும் மடானி கொள்கைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் SINDA, மற்றும் மலேசியாவின் பூமிபுத்ரா அமைப்புகள் போல ஒரு கட்டமைக்கப்பட்ட, நிரந்தர ஆதரவு மாதிரியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்நிதி பரிந்துரைக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கான தலைமைத்துவ மற்றும் திறன்பயிற்சி, பெண்கள் வணிகம் மற்றும் புத்தாக்க சுயவளர்ச்சி, SME-களுக்கு மூலதன வாய்ப்பு மற்றும் சந்தை விரிவாக்கம், புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பங்குதார உரிமை உயர்த்தல் ஆகியவை இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.
“இது நன்கொடை அல்ல, மலேசியாவின் புதிய திறன்மேம்பாட்டிற்கு செய்யப்படும் முதலீடு” என MIET வருணித்தது.
இத்திட்டம் இந்தியச் சமூகத்துக்கே மட்டுமல்ல, ஒற்றுமைமிக்க, வலுவான மலேசியாவுக்கே தேவையான ஒரு முதலீடு என அது குறிப்பிட்டது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 13-ஆவது மலேசியத் திட்டம் இம்மாதக் கடைசியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.