கோலாலம்பூர் , ஜூலை 4 – எதிர்வரும் 16 ஆவது பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு தேசிய முன்னணி பக்காத்தானுடன் ஒத்துழைக்கும் என தேசிய முன்னணியின் தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி பேசியிருப்பது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக ம.இ.காவும் ம.சீ.சவும் தெரிவித்துள்ளன. 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்ட தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் தவணைக் காலம் முடிவுறும்வரை பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது என்ற ம.இ.காவின் நிலைப்பாட்டை ஏற்கனவே கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேசிய முன்னணி அகமட் ஸாஹிட் ஹமிடியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் 16 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான ஹரப்பானுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இதுவரை எதுவும் விவாதிக்கப்படவில்லையெனெ ம.இ,காவின் தலைமை செயலாளரான டத்தோ ஆர்.டி ராஜசேகரன் இன்று தெரிவித்தார். டத்தோ ராஜசேகரன்
இந்த நாடாளுமன்ற கால அவகாசம் முடிவுறும் வரை மட்டுமே பக்காத்தானுடன் ஒத்துழைப்பு இருக்கும் என ம.சீ.ச தலைவர் ஏற்கனவே கூறியதை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சொங் சின் வூன் சுட்டிக்காட்டினார். அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைப்பது குறித்து இதுவரை தேசிய முன்னணியின் உச்ச மன்ற கூட்டத்தில் ஒரு முறை கூட விவாதிக்கப்படவில்லை என அவர் கூறினார்.
இதனிடையே ம.இ.காவுக்கும் ம.சீ.வுக்கு மிடையே ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக அதன் தலைமை செயலாளர் டத்தோ சொங் சின் வூனுடன்
( Chong Sin woon ) இன்று ம.சீ. ச தலைமையகத்தில் சந்திப்பு நடத்தியதாக ராஜசேகரன் தெரிவித்தார். தற்போது ம.இ.கா வசம் இருந்துவரும் தொகுதிகளில் ம.சீ.வுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்திக் கொள்வது மற்றும் அடுத்த பொதுத் தேர்தலின்போது இவ்விரு கட்சிகளுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்கள் குறித்தும் தாங்கள் விவாதித்தாக ராஜசேகரனும் டத்தோ சொங்கும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.