
ஷா ஆலாம், செப்.03- நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi முழு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அதன் வழி மக்களிடம் இருந்து புதிய ஆணையைப் பெற முடியும் என அவர் கூறினார்.
ஒருவேளை, 15ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முழுமையாக நிறைவடைய வேண்டும் என்றாலும் தேர்தலை எதிர்கொள்ள பாரிசான் நேஷனல் (BN) தயாராக இருப்பதாக Zahid Hamidi குறிப்பிட்டார்.
நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்தாண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முழுமை பெறுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் BN பெற்ற வெற்றிகள் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர் தேர்தலில் BN 56 தொகுதிகளில் 48 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்றது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனலுடன் (PN) புரிந்துணர்வு அடிப்படையில் போட்டியிட்ட BN, 36 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றியது.
16 வது பொதுத் தேர்தலுக்கு முன் மீதமுள்ள காலத்தை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.
அம்னோவும் BNனும் தற்போதைய அரசியல் சூழலில் தொடர்ந்து பொருத்தமானதாகவும் வலுவாகவும் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம். ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பயன்படுத்திய உத்திகளை அப்படியே பின்பற்றாமல், ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதியின் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு உத்திகளை இணைத்து 16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என Zahid Hamidi குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே BN மீண்டும் அரசியல் எழுச்சியைப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், கூட்டணி தற்போதைய வெற்றிகளில் மிதந்து விடக்கூடாது என எச்சரித்தார்.
முன்பு BN வசம் இருந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதுடன், “ருமா அம்னோ” எனும் அம்னோவின் அடிப்படை அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவது முக்கியம் என்றாரவர்.
இவ்வேளையில், BNனுக்கு ஆணவம் ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுவதை மறுத்த Zahid Hamidi, அரசியல் மீட்சிக்கு பொறுமையும் ஒழுங்கமைப்பும் மிக முக்கியம் என வலியுறுத்தினார்.
அரசியல் வெற்றி நிரந்தரமானதல்ல. மக்களின் ஆதரவு எந்த நேரத்திலும் மாறக்கூடும் என்பதை அவர் நினைவூட்டினார்.
இதனிடையே இளைஞர்களிடையே அம்னோ மற்றும் BN மீது ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் 40 வயதுக்குக் குறைவானவர்கள் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் Zahid Hamidi தெரிவித்தார்.



