
ஜோகூர் பாரு, செப்.02-ஜோகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி 48 மணி நேரம் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில், பல்வேறு குடிநுழைவு விதிமீறல்களுக்காக 123 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆறு மலேசியர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வணிக வளாகங்களின் மேலாளர்கள் என நம்பப்படுவதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.
உணவகங்கள், வாகனப் பராமரிப்பு மையங்கள், சலவைக் கடைகள், கார் உதிரிபாகக் கடைகள், ரிஃப்ளெக்சாலஜி மையங்கள் ஆகியவற்றைக் குறி வைத்து இரு நாட்களுக்கு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள், கடவுச்சீட்டு அனுமதி அல்லது வேலை அனுமதிப் பத்திரங்கள் இல்லை. விசாரணைக்கு உதவுவதற்காக 29 சம்மன்களும் வெளியிடப்பட்டன.
கைது செய்யப்பட்ட 123 பேரில் 53 ஆண்கள். 70 பேர் பெண்கள். அவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களில் 47 ஆண்களும் 27 பெண்களும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள். 14 பெண்கள் உட்பட 24 பேர் இந்தோனேசியர்கள்.
ஆறு ஆண்கள் நேப்பாள நாட்டவர்கள். தலா ஐந்து ஆண்கள் வங்காளதேசத்தையும் பாகிஸ்தானையும் சேர்ந்தவர்கள். 9 பேர் சீன நாட்டவர்கள். எஞ்சிய ஒரு பெண் வியட்னாமியர்.
அவர்களில் சிலர் சமையல்காரர்கள், மசாஜ் செய்பவர்கள் மற்றும் சேவைப் பணியாளர்களாக வேலை செய்து வந்தவர்கள்.
மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வளாகங்களுக்கு வாடிக்கையாளர்களாகச் சென்றவர்கள் என குடிநுழைவுத்துறை தெரிவித்தது. விசாரணைக்காக 123 பேரும் Setia Tropika குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



