Latestஉலகம்

கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட கோல்ஃப் ஜாம்பவான் Tiger Woods

உலகப் புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் Tiger Woods, தம் மீதான பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார்.

போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து அது சுமூகமாக முடிவடைந்துள்ளது.

போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாக இதற்கு முன் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பின்னர் அது பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக குறைந்த அளவிலான குற்றச்சாட்டாகக் கொண்டு வரப்பட்டது.

Martin மாவட்ட நீதிமன்றத்துக்கு தமது காதலி Vanessa Trumpப்புடன் சூட் அணிந்து சென்ற Woods, புகைப்படக் கலைஞர்களைக் கடந்து செல்லும் போது அமைதியாகக் காணப்பட்டார்.

நீதிமன்றத்தில் அவர் தமது முந்தைய வாக்குமூலத்தை மாற்றினார். அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, Woodsசின் ஓட்டுநர் உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு முடக்கப்படவிருக்கிறது.

கடந்த மார்ச் 27ஆம் தேதி Florida, Jupiterரில் வாகன விபத்தொன்று நிகழ்ந்த இடத்தில் இருந்த Woods, இரு opioid மாத்திரைகளுடன் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

அவர் ஓட்டிச் சென்ற Land Rover வேகமாகச் சென்ற போது டிரெய்லர் லாரி மீது மோதி கவிழ்ந்ததாகவும், அதில் சுமார் 5,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காயமின்றி வாகனத்திலிருந்து வெளியேறிய Woods, விபத்து நேரத்தில் கைத்தொலைபேசியைப் பார்த்துக் கொண்டும் வானொலி சேனலை மாற்றிக் கொண்டும் இருந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

மூச்சுப் பரிசோதனையில் அவரது உடலில் மதுபானம் அருந்திய அறிகுறி ஏதும் கண்டறியப்படவில்லை.

எனினும், சிறுநீர் பரிசோதனைக்கு அவர் மறுத்ததாக காவல்துறை தெரிவித்தது. அதனை அடுத்து, மருத்துவமனைப் பதிவுகளையும் அவர் பயன்படுத்திய பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான பதிவுகளையும் பெற நீதிமன்றம் அரசு தரப்புக்கு அனுமதி வழங்கியது.

விபத்துக்குப் பின் Woods, சுவிட்சர்லாந்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும், அமெரிக்கா திரும்பிய பின் கடந்த மாதம் வரை பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் 2024 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் Royal Troonனில் நடைபெற்ற பொது கோல்ஃப் போட்டிக்குப் பின் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Woods, காயத்துக்காகவும் முதுகுப் பகுதி பாதிப்புக்காகவும் ஏழாவது முறையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!