
ஜகார்த்தா, செப்டம்பர் 3 – இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மற்றும் மத்திய கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ காரணமாக தீ ஏற்படும் அபாயப் பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு பகுதிகளிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக இந்தோனேசிய வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக ஆளுநர், காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரத்தின்படி, மேற்கு கலிமந்தானில் தீ ஏற்படும் அபாயப் பகுதிகளின் எண்ணிக்கை 273-லிருந்து 859 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கலிமந்தானில் 253-லிருந்து 623 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு சுமாத்திராவில் தீ ஏற்படும் அபாயப் பகுதிகளின் எண்ணிக்கை 20-லிருந்து 89 ஆகவும், தெற்கு கலிமந்தானில் 22-லிருந்து 73 ஆகவும் அதிகரித்துள்ளன. ஜாம்பியில் புதிதாக 4 தீ பிடிக்கும் பகுதிகள் பதிவாகியுள்ளன.
இந்த மாதம் எல் நினோ உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதால், காட்டுத் தீயை தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.



