
கோலாலம்பூர், ஜூலை 1 – மலேசியாவில் பிறந்த ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை மிஷெல் யோவை (Michelle Yeoh) காதலிக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே திருமணம் செய்ய விரும்பியதாக அவரது கணவர் ஜீன் டோட் (Jean Todt) தெரிவித்துள்ளார்.
ஆனால், இருவரின் பணிப்பளு காரணமாக அந்தத் திட்டம் தொடர்ந்து தள்ளிப்போய், 19 ஆண்டுகளுக்குப் பிறகே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
2004 ஜூன் 4-ஆம் தேதி ஷாங்காயில் முதன்முதலாக சந்தித்த இந்த ஜோடி, சில வாரங்களிலேயே நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருந்தது.
மேலும், மிஷெல் யோவின் மறைந்த தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்தத் திருமணம் நடைபெற்றதாக ஜீன் டோட் கூறினார்.
6,992 நாட்கள் ஒன்றாக இருந்த பிறகே தாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்றும் அது தங்களின் விதி, என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.



