
கோலாலம்பூர், ஜூன்-2-நாட்டின் ஒற்றுமையே ஒட்டுமொத்த பலத்தின் அடித்தளம் என மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற தமது அதிகாரப்பூர்வ பிறந்தநாள் அரசு விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய மாமன்னர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த மக்கள் அனைவரும் சகிப்புத்தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, கடந்த 1969-ஆம் ஆண்டு மே 13-ல் நடைபெற்ற இனக்கலவரம் நாட்டின் வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என்றும், மற்றவர்களை அவமதித்து, நாட்டின் இறையாண்மையைக் கொச்சைப்படுத்திய சிலரின் எல்லை மீறிய செயல்களால்தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், 1970-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ருக்குன் நெகாரா’ தேசியக் கோட்பாடுகள், நாட்டின் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப ஒட்டுமொத்த மலேசியர்களும் எடுத்த சத்தியப்பிரமாணம் ஆகும் என மாமன்னர் சுட்டிக் காட்டினார்.
இக்கோட்பாடுகளைப் பின்பற்ற மறுக்கும் எவரும், தங்களை மலேசியப் பிரஜை என்று அழைத்துக்கொள்ள தகுதியற்றவர்கள் என்றும் மாமன்னர் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



