
ஜோகூர் பாரு, ஜூன் -1 – அரசியல் களத்தில் அதிரடித் திருப்பமாக, 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், மாநில சட்டமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட்டுள்ளது.
மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அதனை அறிவித்தார்.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து, 15-ஆவது சட்டமன்றம் இன்று கலைக்கப்படுவதாக, தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிவிப்பை வெளியிட்டார்.
மாநிலத்தின் நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தவும், மக்களிடமிருந்து புதிய மற்றும் புதியதொரு பலமான தார்மீக ஆணையைப் பெறவுமே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையமான SPR இன்றிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் சட்டமன்றத்தில் 56 தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது; பெரும்பான்மைக்கு 29 இடங்கள் தேவையாகும்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் ஏக காலத்தில் நடைபெறலாமென்ற பேச்சு நிலவி வந்த நிலையில், முதல் ஆளாக ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் ஒரே கட்டத் தேர்தல் வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.



