Latestமலேசியா

உள்ளூர் மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பு பூர்த்தி; உலு திராம் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலய மண்டபத்தை திறந்து வைத்தார் ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காசி

தெப்ராவ், ஜூன்-1 – ஜோகூர், தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டேசா செமர்லாங் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தின் புதிய சமூக மண்டபத்தை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் கா’சி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

நேற்று காலை ஐநூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டிருந்த இந்த விழாவில், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி மற்றும் உள்ளூர் ம.இ.கா, தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிதிப் பிரச்னையால் 2016 கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் மண்டபம் பாதியிலேயே கைவிடப்பட்டுக் கிடந்தது.

எனினும், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக-அரசியல் தலைவர்களின் இடைவிடாத முயற்சியின் பலனாக, முடங்கிக் கிடந்த இக்கட்டடப் பணிக்கு, மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் கடந்த 2022-ல் நேரில் வந்து RM500,000 அவசர நிதி வழங்கி, இன்று அதனைப் பிரம்மாண்டமாகத் திறந்தும் வைத்துள்ளார்.

விழாவில் பேசிய அவர், கலாச்சார நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி பல்வேறு சமூக நடவடிக்கைகளும் இம்மண்டபம் பயன் தரட்டும் என சொன்னார்.

தங்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, நேரில் வந்து நிதியுதவி வழங்கி கனவை நனவாக்கிய மந்திரி பெசாருக்கும், ஜோகூர் மாநில அரசுக்கும் ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் சார்பில், ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத் தலைவர் சுந்தரம் சேவதன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பண்பாட்டு நிகழ்வுகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ‘Bangsa Johor’ சமூகத்தின் ஒற்றுமைப் பாலமாக இந்த மண்டபம் திகழும் எனப் பிரமுகர்கள் வாழ்த்தினர்.

இச்சந்திப்பின் போது ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய Bakul Kasih Johor நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

வெறும் மண்டப திறப்பு விழாவாக இல்லாமல், உள்ளூர் மக்களுடன் மந்திரி பெசார் நேரில் சந்தித்து அளவளாவி, குறைகளைக் கண்டறியும் சந்தரப்பமாகவும் இது அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!