
புத்ராஜெயா, ஜூன்-1 – இன்று, ஜூன் ஒன்றாம் தேதி முதல், நாட்டிலுள்ள 9 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு PERKESO-வின் கீழ் LINDUNG 24 Jam எனப்படும் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஓர் அறிக்கை வழி அதனை அறிவித்தார்.
வேலை நேரம் தவிர்த்த பொது விடுமுறை மற்றும் இதர நாட்களில் ஏற்படும் வேலை சாராத விபத்துகளுக்கும் இத்திட்டம் முழுமையான சமூகப் பாதுகாப்பு வழங்கும்.
தற்போது பணியில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு இயல்பாகவே அமுலுக்கு வரும்; புதிய பதிவுகள் தேவையில்லை என்றார் அவர்.
ஆரம்பக் கட்டமாக, தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து 0.75% பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்யப்படும்.
இதற்கு அதிகபட்ச சம்பள வரம்பு 6,000 ரிங்கிட்டாகும்.
இத்தொகையை முதலாளிகள் PERKESO-வுக்குச் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் மருத்துவ நலன்கள், தற்காலிக மற்றும் நிரந்தர செயலிழப்பு மற்றும் ஊனங்களுக்கான உதவித்தொகை, மற்றும் சார்ந்திருப்போருக்கான கல்வி நிதியுதவி உள்ளிட்ட 8 முக்கிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இது மலேசிய மடானி கொள்கையின் கீழ் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதாக ரமணன் குறிப்பிட்டார்.
இத்திட்டம் குறித்த மேல் தகவல்களுக்கு, https://lindungfaedah.perkeso.gov.my/ என்ற இணைய அகப்பக்கத்திற்குச் சென்றோ அல்லது அருகிலுள்ள PERKESO அலுவலகங்களுக்குச் சென்றோ தெரிந்துகொள்ளலாம்.



