கோலாலம்பூர், ஜூன்-14, 1MDB ஊழல் தொடர்பில் புதிதாக 721.4 மில்லியன் ரிங்கிட் பணம் மலேசியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதை, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படி மலேசியாவிடம் பணம் திருப்பித் தரப்படுவது இது நான்காவது தடவை.
இதுவரை மொத்தமாக 6.6 பில்லியன் ரிங்கிட் நிதி மீட்கப்பட்டு மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மலேசியர்களுக்குச் சொந்தமான பணம் மலேசியர்களிடமே போய் சேருவதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என அமெரிக்கத் தூதர் எட்கட் டி காகன் (Edgard D Kagan) கூறினார்.
1MDB நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட எஞ்சியப் பணத்தையும் மீட்டு மலேசிய அரசிடம் ஒப்படைக்கும் கடப்பாட்டில் அமெரிக்க நீதித் துறை DoJ உறுதியாக இருப்பதாக அவர் சொன்னார்.
உலகம் கண்ட மாபெரும் ஊழல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 1MDB-யில் மோசடி செய்யப்பட்ட 96 மில்லியன் டாலர் நிதியை மீட்டெடுக்கும் முயற்சியில், அமெரிக்க நீதித்துறை DoJ, 2020-ல் இறங்கியது குறிப்பிடத்தக்கது.