
கோலாலம்பூர்- மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையையும் புத்தாக்கத் திறனையும் வளர்க்கும் தேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா, இவ்வாண்டு தனது 20ஆம் ஆண்டில் தடம் பதித்துள்ளது.

அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் இயக்கத்தின் (ASTI) ஏற்பாட்டில், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவுடன் அக்டோபர் 24, 25 ஆம் தேதிகளில் இம்பி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில், நாடு முழுவதிலுமிருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டியில் ஆண்டுதோறும் 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாண்டு மாநில அளவில் 360 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற நிலையில், 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி தேசியப் போட்டிக்கு வழக்கமான 70 பள்ளிகளுக்குப் பதிலாக 80 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.


மாணவர்கள் நடுவர்கள் வழங்கிய 10 தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆய்வுகளை மேற்கொண்டதுடன், நேரடி செய்முறைத் தேர்விலும் பங்கேற்றனர். பின்னர் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தனர்.
இவ்விழாவில் 20 பள்ளிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன. ஜோகூர் மாநிலத்தின் பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி முதலிடத்தைப் பெற்று பிளாட்டினம் விருதையும் 2,500 ரிங்கிட் ரொக்கப் பரிசையும் வென்றது. இரண்டாம் இடத்தைப் பெற்ற கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளிக்கும், மூன்றாம் இடத்தைப் பெற்ற சிலாங்கூரின் காஜாங் தமிழ்ப்பள்ளிக்கும் தங்க விருதுகளுடன் தலா 1,500 ரிங்கிட் வழங்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளிகளுக்கு முறையே பிளாட்டினம், தங்கம், தங்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. நான்காம் முதல் ஆறாம் இடம் வரை பெற்ற ஜோகூர் மற்றும் பேராக் மாநிலப் பள்ளிகளுக்கு வெள்ளி விருதுகளும், ஏழாம் முதல் பத்தாம் இடம் வரை பெற்ற பள்ளிகளுக்கு வெண்கல விருதுகளும் வழங்கப்பட்டன.
பஹாங்கின் காராக் தமிழ்ப்பள்ளி டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன் சின்னதுரை புத்தாக்க விருதைப் பெற்றது. 11 முதல் 20ஆம் நிலை வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள் இடம் பெற்றன.
மேலும், ஜோகூர் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் உதவி இயக்குநர் இரவிச்சந்திரன் இராமச்சந்திரனுக்கு ‘ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ சமூகப் புத்தாக்க விருது வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர்களான வித்தியா இராமநாதன், அமுதா குப்புசாமி, ஷீலா ஆறுமுகம் ஆகியோர் ‘இராமானுஜம்’ விருதைப் பெற்றனர். ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கட்டுரைப் போட்டியும் பள்ளிகள், பாலர் பள்ளிகளுக்கான அறிவியல் விழா காணொளிப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இவ்விழா 2007ஆம் ஆண்டு பள்ளி அளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, மாவட்ட அளவுக்கு விரிவடைந்து, தற்போது தேசிய அளவில் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக ASTI தலைவர் டாக்டர் முகமது யூனுஸ் யாசின் தெரிவித்தார்.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்து, பரிசுகள் வழங்குவது அவசியம் எனத் திட்ட இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
விழாவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட குழு ‘வணக்கம் மலேசியா’வுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டனர்.
இவ்விழா, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் ஆய்வுத் திறனையும் வளர்ப்பதுடன், எதிர்கால இளம் அறிவியலாளர்களை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது. இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது, மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையையும் அறிவியல் சாதனைகளையும் மேம்படுத்த உதவும்.



