கோலாலம்பூர், அக் 29 – 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம்வரை , மோசடி வழக்குகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனை சேவைகள் தொடர்பாக இணைய மோசடி மீதான தேசிய பதில் மையம் புகார்கள் உட்பட மொத்தம் 122,603 அழைப்புகளை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 371 மில்லியன் ரிங்கிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் நெகாரா மலேசியா ( BNM ) ஆன்லைன் எனப்படும் இணைய வங்கி நடவடிக்கைகளின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் தரங்கள் எப்போதும் சிறந்த தொழில் நடைமுறைகளுக்கு ஏற்ப வலுப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வங்கிகளுக்கான தேவைகளை நிர்ணயித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஏற்கனவே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிதி நிறுவனங்களால் செய்யப்பட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது, 2023 ஆம் ஆண்டிற்கான 383 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைத் தடுக்க நிதி நிறுவனங்களுக்கு வெற்றிகரமாக உதவியது நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் Stampin நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சியெங் ஜென் (Chong Chieng Jen ) கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சு அளித்த எழுத்துப் பூர்வமான இந்த விளக்கம் நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.