
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சு இயற்ற உத்தேசித்துள்ள நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தை, ‘வீட்டைப் பறிக்கும் சட்டம்’ என உவமைப்படுத்தியுள்ள மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானின் கூற்று தவறானது.
அமைச்சர் ங்கா கோர் மிங் அறிக்கையொன்றில் அவ்வாறு கூறினார்.
அச்சட்டமானது வீட்டு உரிமையாளரின் அடிப்படை உரிமைக்கு உத்தரவாதமளிக்கும்; ஒருபோதும் வீட்டைப் பறிக்காது;
எனவே, அச்சட்டம் குறிப்பிட்ட சில இனங்களை ஒதுக்குமெனக் கவலைத் தெரிவித்துள்ள விமர்சகர்களின் கூற்றை அமைச்சர் நிராகரித்தார்.
மாறாக, அதிகாரிகள் நிர்ணயித்த நிபந்தனைகளின்படி மேம்பாடு செயல்படுத்தப்பட்ட பிறகு, சொத்துடைமையாளர்கள் தங்கள் சொத்துக்கு அதிக மதிப்பைப் பெறுவர் என்றார் அவர்.
இந்தச் சட்டம், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இன வேறுபாடுகள் அல்லது வருமான நிலைகளின் அடிப்படையில், சில தரப்பினர் குறிப்பாக B40 மற்றும் M40 வர்கத்தினரை ஓரங்கட்டவோ அல்லது அச்சுறுத்தவோ மாட்டாது என அமைச்சர் உறுதியளித்தார்.
இச்சட்ட வரைவில், வற்புறுத்தல் அம்சங்கள் எதுவும் இல்லை; காரணம் பேச்சுவார்த்தை மூலமே சொத்து உரிமையாளர்களின் ஒப்புதல் பெறப்படும்; மாறாக கட்டாய கையகப்படுத்தலால் அல்ல என்றார் அவர்.
URA என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த உத்தேசச் சட்டத்தால், நகர்ப்புற ஏழைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவர்; இது அவர்களுக்கு இழைக்கப்படும் பெரிய துரோகம் என, அதனை எதிர்ப்பவர்கள் வாதிடுகின்றனர்.
இச்சட்டத்தின் மூலம், வளர்ச்சி ஒப்புதலுக்கான வரம்பை அரசாங்கம் 100 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காட்டுக்குக் குறைத்திருப்பதாக மக்களவையில் கூறிக் கொண்ட சைட் சாடிக், URA-வை பேசாமல் “வீடு பறிமுதல்” சட்டம் என்று மாற்றி விடலாமென சாடியிருந்தார்.