
வட லண்டன், மே-20-சுமார் 22 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குக் பிறகு, Arsenal கால்பந்து அணி மீண்டும் பிரீமியர் லீக் சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
அதுவும் களத்தில் விளையாடாமலேயே, லீக் பட்டத்தை அது தன்வசப்படுத்தியது.
Bournemouth அணிக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் Manchester City அணி 1-1 என சமநிலை கண்டதை அடுத்து, Arsenal-லின் இந்த வரலாற்று வெற்றி உறுதியானது.
லீக் பட்டத்திற்கான பந்தயத்தை இறுதி நாள் வரை கொண்டுச் செல்ல City-க்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி கட்டாயமாக இருந்தது.
ஆனால், 1-1 என சமநிலை மட்டுமே கண்டதால், கடைசி 38-ஆவது ஆட்டத்தில் ஒருவேளை வெற்றிப் பெற்றாலும் கூட அவர்களால் Arsenal-லை முந்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
City-யின் இவ்வாட்ட முடிவைக் காண, பயிற்சி மையத்தில் ஆவலுடன் காத்திருந்த Arsenal வீரர்கள் விசில் ஊதியதும் துள்ளிகுதித்தும் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
Arsenal-லின் Emirates அரங்கிற்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு, பட்டாசுகள் வெடித்தும், கொடிகளை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
வட லண்டன் வீதிகள் தற்போது சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கடலாகக் காட்சியளிக்கின்றன.
கடந்த 3 பருவங்களாகத் தொடர்ந்து இரண்டாவது இடத்தையே பிடித்து வந்த Arsenal, இம்முறை மகுடத்தை தட்டிச் சென்றுள்ளதால்,
உலகெங்கிலும் உள்ள Arsenal இரசிகர்களின் 22 ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
பிரீமியர் லீக் கிண்ணம் வரும் ஞாயிறன்று Arsenal-லிடம் ஒப்படைக்கப்படும்.



