
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24-22-வது மலேசிய சர்வதேச ஹலால் கண்காட்சியான 2026 MIHASசின் விற்பனை இலக்கு 4.5 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்துலக இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அப்புதிய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக MATRADE எனும் மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
அதோடு 2026 MIHASசின் புதிய அம்சங்களில் ‘ஏற்றுமதியில் பெண்கள்’ (Women in Export) என்ற பிரிவு முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக MATRADE-இன் தலைமை நிர்வாக அதிகாரி Dato Indera Abu Bakar Yusof கூறினார். அதோடு கண்காட்சியின் போது வாங்குபவர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சாத்தியமான வணிகக் கூட்டாளர்களை இணைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய செயலி பயன்படுத்தப்படும்.
மேலும் உணவு, பானங்களைத் தவிர, இஸ்லாமிய நிதி, ஹலால் logistics, உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், நுகர்வோர் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் போன்ற துறைகளும் அக்கண்காட்சியில் இடம் பெறவிருப்பதாக அவர் கூறினார்.
2026 MIHAS கண்காட்சியின் குறைந்தது 45 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் 2,400 அரங்குகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், ஹலால் சான்றளிப்பு என்பது ஹலால் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு அடிப்படையாக இருப்பதாக JAKIM தலைமை இயக்குநர் Datuk Dr Sirajuddin Suhaimee குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவின் ஹலால் சான்றளிப்பு முறை அரசாங்கத்தின் மேற்பார்வை மற்றும் அமலாக்கத்தால் தனித்துவமானது. ஹலால் சான்றிதழ் பெற்ற வணிகங்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வழக்கமான தணிக்கைகள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் மாறிவரும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப மலேசியா தனது ஹலால் தரநிலைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருவதாகவும் Sirajuddin தெரிவித்தார்.
‘குளோபல் ஹலால் உச்சிமாநாடு (GHaS) 2026′ குறித்து MATRADE மற்றும் JAKIM இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்விருவரும் அவ்விவரங்களை வெளியிட்டனர். 2026 MIHAS கண்காட்சி கோலாலம்பூரில் உள்ள மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) செப்டம்பர் 23 முதல் 26 வரை நடைபெறவுள்ளது.



