Latestமலேசியா

25 ஆண்டுகால கல்விச் சேவை: ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 17-ஆவது பட்டமளிப்பு விழாவில் 637 பேர் பட்டம் பெற்றனர்

பெடோங், ஜூன்-27 – கெடா, பெடோங்கில் அமைந்துள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், உயர்கல்வித் துறையில் தனது 25 ஆண்டுகால சாதனைப் பயணத்துடன் கூடிய 17-ஆவது பட்டமளிப்பு விழாவை இன்று சிறப்பாக நடத்தியது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ம.இ.கா தேசியத் தலைவருமான தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மொத்தம் 637 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், இந்த 25 ஆண்டுகாலப் பயணம் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல, இப்பல்கலைக்கழகத்தின் உன்னத நோக்கத்தின் சான்றாகும் என்றார்.

மாணவர்களின் பெற்றோரின் வங்கிச் சேமிப்பைப் பார்த்து ஏய்ம்ஸ்ட் உருவாக்கப்படவில்லை என்றும்; இனம், மதம் அல்லது பொருளாதாரப் பின்னணி எதையும் பாராமல் அனைவருக்கும் சமமான கல்விச் சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் என்ற அடிப்படையில், கடுமையான பொருளாதார நெருக்கடி காலங்களிலும் ஏய்ம்ஸ்ட் தனது கல்விக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்பதோடு, மற்ற தனியார் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

திறமையான மற்றும் வசதி குறைந்த மாணவர்களின் கனவுகளை நனவாக்க MIED கல்வி உதவித்தொகைகளும் கடனுதவிகளும் பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றன.

MIED-ன் ஒட்டுமொத்த வருமானமும் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டுமே மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழக வேந்தரோ அல்லது வாரிய உறுப்பினர்களோ இதற்காக எந்தவொரு சம்பளமும் பெறுவதில்லை என்றும், ஏய்ம்ஸ்ட்டின் ஒரு காசு கூட ம.இ.கா-வுக்குச் செல்வதில்லை என்றும் பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் தெரிவித்தார்.

அண்மையில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, அவர் வழங்கிய மான்யத்திற்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட விக்னேஸ்வரன், பல்கலைக்கழகத்தின் அடுத்தகட்ட பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார்.

அதன்படி, 300 படுக்கைகளைக் கொண்ட ஏய்ம்ஸ்ட் மருத்துவமனை மற்றும் சிலாங்கூர், பூச்சோங்கில் 36 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

300 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலம், 170 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மிகவும் சாதுரியமாக வாங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பட்டதாரிகள் அனைவரும் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் நோக்கில் 2 மில்லியன் ரிங்கிட் செலவில் AI அகாடமி உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கால்நடை மருத்துவ மையம், சித்த மருத்துவம் போன்ற போதனா விரிவாக்கமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக விக்னேஸ்வரன் கூறினார்.

இன்றைய பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தகம், பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை உள்ளிட்ட 7 முக்கியத் துறைகளின் கீழ் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவின் உச்சக்கட்டமாக, பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதான ‘தங்கப் பதக்கம்’ உயிரியல் அறிவியல் பட்டதாரி லட்சுமி ஸ்ரீ விஜயனுக்கும், தனித்துவமிக்க முன்னாள் மாணவருக்கான ‘வேந்தர் விருது’ 2002-ஆம் ஆண்டின் முதல் மருத்துவத் தொகுப்பைச் சேர்ந்த மூத்த அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் Dr Aida Nur Sharini Mohd Shah-வுக்கும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழக இணை வேந்தரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், துணைவேந்தர் பேராசிரியர் கதிரேசன், விரிவுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் என ஈராயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!