Latestமலேசியா

16-ஆவது ஜோகூர் தேர்தல்; 56 தொகுதிகளில் 15 இந்திய வேட்பாளர்கள் உட்பட 172 வேட்பாளர்கள் களம்

ஜோகூர் பாரு, ஜூன்-27-16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 56 மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்த வேளையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 172 போட்டியாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையமான SPR உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகு, பெறப்பட்ட 172 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்றும் SPR தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருண் தெரிவித்தார்.

அவ்வகையில் பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) ஆகிய இரண்டு கூட்டணிகளும் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தங்களின் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.

பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில், மந்திரி பெசாரும் மாநில தேசிய முன்னணித் தலைவருமான டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி, மாச்சாப் தொகுதியில் ஏறக்குறையே அதே பெயரைக் கொண்ட பக்காத்தான் ஹராப்பானானின் Hafiz Roslan-னுடன் நேரடி பலப்பரீட்சையில் இறங்குகிறார்.

பக்காத்தானின் முக்கிய வேட்பாளராகக் கூறப்படும் Dr Maszlee Malik, புத்தெரி வங்சா (Puteri Wangsa) தொகுதியில் பாரிசான், MUDA, BERSAMA மற்றும் சுயேட்சை வேட்பாளர் என 5 முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

இவ்வேளையில், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் இந்திய வேட்பாளர்களும் கணிசமான அளவில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

ம.இ.காவைப் பொறுத்தவரை, மாநிலத் தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, Kemelah சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் மற்றும் பெரிக்காத்தான் வேட்பாளர்களோடு மும்முனைப் போட்டியைச் சந்திக்கிறார்.

ரவின் கடந்த முறை தெங்காரோ சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருந்தார்.

பெர்லிங் சட்டமன்றத்தில் பன்னீர் செல்வம், புக்கிட் பத்துவில் ஆர். குமரன், கஹாங்கில் V. ருகேந்திரன் ஆகியோர் ஏனைய ம.இ.கா வேட்பாளர்கள் ஆவர்.

இதனிடையே, பக்காத்தான் சார்பில் புக்கிட் கெப்போங்கில் சுப்ரமணி சாமி, லாயாங் லாயாங் தொகுதியில் குணா பாலகிருஷ்ணன், பாலோ சட்டமன்றத்தில் ரூபன் ஆறுமுகம், ஸ்கூடாயில் கார்தியாயினி ஜெயபாலன் களமிறங்கியுள்ளனர்.

பெரிக்காத்தான் சார்பில் MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, பெர்மாஸ் தொகுதியில் T வேலா, புக்கிட் பெர்மாயில் M. லீனா மனோ, கோத்தா இஸ்கண்டாரில் SS. அண்ணா பிரவீனா, பாலோவில் DS ஜீவகுமார், பெமானிஸ் தொகுதியில் Dr A. அரிவேந்தரன் ஆகிய ஐவரை களமிறக்கியுள்ளது.

MUDA கட்சி சார்பில் புக்கிட் பத்துவில் பிரேமானந்த் மணியமும், டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் BERSAMA கட்சி சார்பில் அதே தொகுதியில் G. தமிழி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநில ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு நடைபெறும்.

ஜூலை 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!