3 ஆண்டுகளுக்குப் பிறகு அம்னோவுக்குத் திரும்பிய கைரி; ஹிஷாமுடினின் இடைநீக்கமும் இரத்து

கோலாலம்பூர், ஏப்ரல்-18,
அம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின், 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இம்முடிவு மலாக்காவில் நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
கைரியுடன் சேர்ந்து டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேய்ன், தான் ஸ்ரீ சையிட் ஹமிட் அல்பார் போன்ற முக்கிய தலைவர்களும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைமைக்கு எதிராக நடந்துகொண்டதாகக் கூறி, 2023-ல் அம்னோவிலிருந்து கைரி நீக்கப்பட்ட வேளை, முன்னாள் உதவித் தலைவரான ஹிஷாமுடின் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
முந்தைய தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவரான ஹமிட் அல்பாரோ, இதுநாள் வரை பெர்சாத்துவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், “Gagasan Rumah Bangsa” முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முக்கியத் தலைவர்கள் உட்பட இதுவரை 6,252 முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளதாக, அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
இவ்வேளையில், கட்சியில் மீண்டும் சேர்த்துகொண்டதற்கு கைரி நன்றி தெரிவித்து, “நான் மீண்டும் என் வீட்டுக்கே வந்துவிட்டேன்” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பழையத் தலைவர்களையும் முன்னாள் உறுப்பினர்களையும் அரவணைக்கும் இந்த நடவடிக்கை, எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ள குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலுக்கு அம்னோவை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.



