
மும்பை, ஜூன்-7-இந்தியா, மும்பையில் உள்ள பிரபல 5-நட்சத்திர ஆடம்பர ஹோட்டல் ஒன்றில், ஓர் ஆடவருக்கு சாதாரண காலை உணவுகளுக்கு 2,300 ரூபாய் கட்டணம் போடப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நம்மூர் பணத்திற்கு இது 97 ரிங்கிட் 19 சென்னாகும்.
வெறும் வேக வைத்த 3 முட்டைகள், உருளைக் கிழங்கு பரோட்டா, தயிர் மற்றும் ஒரு மில்க் ஷேக் (milk shake) பானத்தை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், சாப்பிட்டு முடித்த பின் வந்த கட்டண இரசீதைப் பார்த்த அவருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.
அதில், வெறும் 3 முட்டைகளுக்கு 500 ரூபாயும், ஒரே ஒரு பரோட்டாவுக்கு 1,100 ரூபாயும் வசூலிக்கப்பட்டு, வரி உள்ளிட்ட கட்டணங்களுடன் மொத்த கட்டணம் 2,300 ரூபாயைத் தாண்டியுள்ளது.
இந்த இரசீது நகலை அவர் இணையத்தில் பகிரவே, வலைத்தளவாசிகள் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாதாரண உணவுகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, நட்சத்திர ஹோட்டல்களில் உணவின் விலையை விட அங்குள்ள ஆடம்பர சூழல் மற்றும் சேவைக்கே கட்டணம் வசூலிக்கப்படுவதாக மற்றொரு தரப்பினர் வாதாடுகின்றனர்.
இதற்கு முன்னர் போலிவூட் நடிகர் ராகுல் போஸ்க்கு 2 வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
ஆடம்பர ஹோட்டல்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், உணவுகளை ஆர்டர் செய்வதற்கு முன்பு அவற்றின் விலைப் பட்டியலைச் சரிபார்ப்பதே இத்தகைய அதிர்ச்சிகளில் இருந்து தங்களைக் காக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



