கோலாலம்பூர், மே 27 – 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் இணைய மோசடி சம்பவங்களில் 525. 5 மில்லியன் ரிங்கிட் இழந்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் துறையின் இயக்குநர் ரம்லி முகமது யூசுப் தெரிவித்திருக்கிறார்.
இந்த காலக் கட்டத்தில் 86,266 பேர் இணைய மோசடி சம்பவங்களில் பணத்தை பறிகொடுத்தனர். அவர்களில் 6.4 விழுக்காட்டினர் அல்லது 5,533 மூத்த முடிமக்கள் 2.7 பில்லியன் ரிங்கிட் இழந்துள்ளதாக Ramli கூறினார். மற்ற வயதுடையவர்களை ஒப்பிடுகையில் இணைய மோசடிகளில் ஏமாந்தவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் இழந்த தொகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகும்.
இந்த நிலை இந்த ஆண்டும் அதிகரித்துள்ளது. இவ்வாண்டு மே மாதம்வரை நிகழ்ந்த 11,918 இணைய மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 8.3 விழுக்காட்டினர் அல்லது 990 பேர் மூத்த குடிமக்களாவர். அவர்கள் இழந்த தொகை 130.4 மில்லியன் ரிங்கிட்டாகும். எனவே இணைய மோசடி சம்பவங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்கும்படி வயதானவர்களுக்கு அவர்களது பிள்ளைகள் எச்சரிக்கை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என ரம்லி முகமது யூசுப் கேட்டுக்கொண்டார்.