புத்ரா ஜெயா, ஜூலை 1 – கே .எல்.ஐ ஏ விமான நிலையத்தின் 2 ஆவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நடவடிக்கையில் சுங்கத் துறை அதிகாரிகள் 3.2 மில்லியன் மதிப்புடைய 30 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். ஜூன் 16 ஆம்தேதி, 33 வயது ஆடவர் ஒருவர் தனக்கு சொந்தமான உணவு பொட்டலத்தை முகப்பிடத்தில் பதிவு செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டதாக சுங்க துறையின் மத்திய மண்டலப் பிரிவின் உதவி இயக்குனர் நோர்லிலா இஸ்மாயில் ( Norlela Ismail ) தெரிவித்தார். அந்த பொட்டலத்தை பரிசோதித்தபோது அதன் உள்ளே இருந்த தேயிலை பொட்டலத்தில் கெத்தமின் போதைப் பொருள் இருந்ததாகவும் அதன் மதிப்பு 760,000 ரிங்கிட்டிற்கும் அதிகமானதாகும். இதனைத் தொடர்ந்து மீரிக்கு செல்லவிருந்த அந்த ஆடவன் கைது செய்யப்பட்டான்.
ஜூன் 19 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில் கே.எல்.ஐ ஏ சிப்பாங் தீர்வையற்ற சரக்கு மண்டல பகுதியில் கூரியர் ( courier) பெட்டியில் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக நோர்லிலா கூறினார். ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த இந்த போதைப் பொருள் ஒரு நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். எனினும் மலேசிய நிறுவன ஆணையத்தின் ஆணைக்குழுவில் பரிசோதித்தபோது குறிப்பிடப்பட்ட அந்த நிறுவனம் மலேசியாவில் இல்லையென்றும் தெரியவந்ததாக நோர்லிலா கூறினார்.