
கோலாலம்பூர், செப்-29-மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பகடிவதைச் சம்பவங்களைத் தடுக்கவும், இவ்வாண்டு 333 தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்தார்.
மேலும், பள்ளித் தங்கும் விடுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் மாணவர்களைக் கண்காணிக்க உதவும் வகையில், ஏப்ரல் முதல் 300 MySTEP விடுதி மேற்பார்வை உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் பகடிவதைக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர்கள் கொண்டுள்ள கவலையை அமைச்சு புரிந்து கொள்வதாக Fadhlina கூறினார்.
பகடிவதை குறித்து புகாரளிப்பவர்கள் மற்றும் சாட்சியமளிப்பவர்களின் விவரங்களைப் பாதுகாக்க, அமைச்சின் புகார் அமைப்பில் அநாமதேயமாகப் புகாரளிக்கும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, S.A.F.E. கட்டமைப்பின் மூலம் தடுப்பு, ஆரம்பகாலத் தலையீடு, சக மாணவர் ஆதரவு மற்றும் ஆலோசனை நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
அதோடு 2027 ஆம் ஆண்டு பள்ளிப் பாடத்திட்டத்தில் நேர்மை, பச்சாதாபம் உள்ளிட்ட பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நன்னெறிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும். மேலும், பகடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ, 2026 பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சு தற்போதைய நடவடிக்கைகளில் திருப்தியடைந்துவிடக்கூடாது. குறைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் பள்ளிகளை மாணவர்களுக்கு பாதுகாப்பான இடங்களாக மாற்றுவது அவசியம் என்றும் Fadhlina வலியுறுத்தினார்.



