
பத்து பஹாட், மே 5 – தனது பராமரிப்பில் இருந்த சிறுமியின் கைப்பகுதியில் கண்ணிப்போய் இருக்கும் அளவுக்கு திருகி காயப்படுத்திய குற்றச்சாட்டை, பாலர் பள்ளிஆசிரியை ஒருவர் இன்று யோங் பெங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மேலும், அந்தச் சம்பவத்தின்போது தனது உணர்வை கட்டுப்படுத்தத் தவறியதற்காக நூருல் அமிரா நதாஸ்யா முகமட் நஸ்ரி (Nurul Amira Natasya Mohd Nazri ) என்ற அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் 1,200 ரிங்கிட் அபராதம் விதித்தார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
25 வயதான நூருல் அமிரா , ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு, பத்து பஹாட் ,தாமான் Sentang Jaya விலுள்ள மழலையர் பள்ளியில் நான்கு வயது சிறுமிக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த சிறுமியை மழலையர் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற அதன் தாயார் அந்த சிறுமியின் கைப்பகுதியில் கண்ணிப்போயிருந்த காயத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு இது குறித்து போலீசில் புகார் செய்தார்.



