Latestமலேசியா

41% வாக்குகள், 121 தொகுதிகளைக் கைப்பற்றி விஜய் முதல்வராகிறார்? முன்னாள் IPS அதிகாரியின் கருத்துக் கணிப்பால் பெரும் பரபரப்பு

சென்னை, மே-3-நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், அடுத்த முதல்வராக வரப்போவது யார் என்பதைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் IPS அதிகாரியான ரவி என்பவர் முன்னாள் போலீஸ்காரர்களை வைத்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார்.

அதாவது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமான த.வெ.க 41 விழுக்காடு வாக்குககளைக் குவித்து ஆட்சியைப் பிடிக்கும் என அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கில் வீதம் sample மாதிரி அடிப்படையில் கணிப்பை வெளியிடும்.

ஆனால், இவரோ அனைத்து 234 தொகுதிகளிலும் மொத்தமாக 234,000 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியிருப்பதால், அதன் துல்லியம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

41 விழுக்காட்டு வாக்குகள் மூலம் 121 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பார் என ரவி கூறுகிறார்.

2,340 முன்னாள் போலீஸ்காரர்கள் நடத்திய தொகுதி வாரியான இந்தக் கருத்துக் கணிப்பில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் TVK-வுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

காலங்காலமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கும் வாக்களித்து வந்த கட்சிக்காரர்கள் கூட, இம்முறை த.வெ.கவின் விசில் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.

பெரும்பாலான பெரியவர்கள், தங்களின் பிள்ளைகளுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் இம்முறை ஓட்டை மாற்றிப் போட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

“TVK-வுக்கு வாக்களிக்கவில்லை என்றால் வீட்டுக்கு வர மாட்டோம், சாப்பிட மாட்டோம்”, என்றெல்லாம் வீட்டிலுள்ள பெரியவர்களை இளம் வாக்காளர்கள் குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் மிரட்டியதும் அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதுவரை வெளிவந்த தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகளில் ஒன்றில் மட்டுமே TVK ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த முன்னாள் IPS அதிகாரியின் தனிப்பட்ட கருத்துக் கணிப்பு விஜய் ஆதவாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் மற்ற கட்சிகள் மத்தியில் ஒருவித கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

இவ்வேளையில், நாளை தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை வாக்குகள் எண்ணப்படும்.

இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு அதாவது மலேசிய நேரப்படி காலை 10.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும்.

பின்னர் 8.30 மணிக்கு EVM எனப்படும் மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை நண்பகல் வாக்கில் முன்னிலை நிலவரங்களை வைத்து, தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யாரென்பதை கணித்து விடலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!