Latestமலேசியா

5 கோடி ரிங்கிட் “பெண்” திட்டம்: இதுவரை 1,229 பெண் தொழில்முனைவோருக்கு 8.8 மில்லியன் ரிங்கிட் கடனுதவி – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், , ஜூலை 19- வணிகத் துறையில் இந்தியப் பெண்களை முன்னேற்றும் இலக்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட 5 கோடி ரிங்கிட் மதிப்பிலான அமானா இக்தியார் மலேசியாவின் “பெண்” திட்டம் வாயிலாக, இதுவரை 1,229 பெண் தொழில்முனைவோருக்கு 8.8 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, அமானா இக்தியார் மலேசியாவின் “பெண்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17ஆம் தேதி வரைக்குமான குறிப்புகளாகும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கு நாடு முழுவதிலிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருவதாகவும், இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10,200 இந்தியப் பெண்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இன்று காலை அமானா இக்தியார் மலேசியா தலைமையகத்தில் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு “பெண்” கடனுதவிக்கான காசோலையை எடுத்து வழங்கிய டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே இன்றைய நிகழ்சியில் கடனுதவி பெற்ற இந்திய பெண் முனைவர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த “பெண்” திட்டத்தின் வாயிலாக அதிகமான கடனுதவி பெற்ற மாநிலமாக பேரா மாநிலம் விளங்குகிறது.

இதுவரை 3.3 மில்லியன் ரிங்கிட் கடனுதவி பேராக் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பெண் தொழில் முனைவர்களுக்கு 1. 8 மில்லியன் ரிங்கிட்டும் நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் உள்ள பெண் தொழில் முனைவர்களுக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமானா இக்தியார் மலேசியாவின் வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சையட் உசேன் சையட் ஜுனிட், அமானா இக்தியார் மலேசியாவின் தலைமை இயக்குநர் ஷாமிர் அஸிஸ், மித்ராவின் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!