
சிரம்பான், மே-4-சிரம்பான், சிக்காமட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் ‘அறச்சுடர்’ திட்டத்தின் கீழ், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநில நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் J. அருள்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸ்ரீ மஹா சண்டி யாகத்தின் மூலம் திரட்டப்பட்ட உபரி நிதியை, கல்விப் பணிக்காகப் பயன்படுத்த ஆலய நிர்வாகம் முடிவுச் செய்தது.
இதன் ஒரு பகுதியாக, 5 தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்களை வாங்க இந்த நிதிப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறிப்பாக லோபாக் தமிழ்ப் பள்ளி, பாஜாம் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி மற்றும் செனாவாங் உள்ளிட்ட பள்ளிகளுக்குத் தொலைக்காட்சி பெட்டிகள், மேசை-நாற்காலிகள் மற்றும் கணினிகள் வழங்குவதற்கான மாதிரி காசோலைகள் வழங்கப்பட்டன.
10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ‘அச்சய பாத்திரம்’ திட்டத்தின் நீட்சியாகவே இது அமைந்திருப்பதாக ஆலயத் தலைவர் திருநாவுக்கரசந் சுப்பன் குறிப்பிட்டார்.
ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, சமூக மேம்பாட்டு மையங்களாகத் திகழ வேண்டும் என, அருள்குமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆலயச் செயலாளர் என். மாரேன் குமாரசாமி மேல் தகவல்களைப் பகிர்ந்தார்.
நிதிப் பெற்றவர்கள் ஆலய நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் என சுமார் 60 பேர் இந்த ‘அறச்சுடர்’ நிகழ்வில் பங்கேற்றனர்.



